மயிலாடுதுறை அருகே காரில் 900 லிட்டர் சாராயம் கடத்தல் டிரைவருக்கு வலைவீச்சு


மயிலாடுதுறை அருகே காரில் 900 லிட்டர் சாராயம் கடத்தல் டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 5:47 PM GMT)

மயிலாடுதுறை அருகே காரில் 900 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்ட கலால் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று அடைக்கலபுரம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், போலீசாரை கண்டதும் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றனார்.

சிறிது தூரம் சென்றதும் டிரைவர், காரை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் இருந்த மூட்டைக்குள் 900 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.

டிரைவருக்கு வலைவீச்சு

இதனை தொடர்ந்து போலீசார், சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயத்தை கடத்தி சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story