காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினால் தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினால் தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:15 PM GMT (Updated: 30 Oct 2019 6:54 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்து உயிரிழந்ததைத் தொடார்ந்து, மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமானது அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

பயனற்ற ஆழ்துளை கிணறுகளைக் கண்டறிந்து உடனடியாக மூடிவிட வேண்டும், மாவட்டத்தில் திறந்த வெளி கிணறுகளை தோண்டுதல், ஆழப்படுத்துதல், புனரமைத்தல் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். இதை கண்காணிக்கும் வகையில், இது போன்ற விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ரசீது பெறுவது அவசியம். முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றியே ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டும், கிணறு தோண்டும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், பணி நடக்கும் பகுதியை சுற்றிலும் முள்வேலி அல்லது தடுப்புகளை கட்டாயம் அமைக்க வேண்டும், தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், ஆழ்துளை கிணற்றை முறையாக மூட வேண்டும், ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பின் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story