குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட திருவான்மியூர், மாதவரம் திட்டப்பகுதிகளுக்கான கிரய பத்திரம் சிறப்பு முகாம்கள் மூலம் 12, 13-ந்தேதிகளில் வழங்கப்படுகிறது
குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட திருவான்மியூர், மாதவரம் திட்டப்பகுதிகளுக்கான கிரய பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் 12, 13-ந்தேதிகளில் நடக்கிறது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கிரய பத்திரம்
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளை சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்ட குடிசைப்பகுதிகளாக மாற்றி அங்கு வசித்து வந்தவர்களுக்கே, அவர்களின் மனைகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டிருந்தது.
இத்திட்டப்பகுதியின் நிலங்களை வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக உயர் அலுவலர்கள் கொண்ட செயலாக்கக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழு எடுத்த முடிவுகளின்படி தமிழகம் முழுவதும் உள்ள 17 திட்டப்பகுதிகளின் நிலங்கள் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 368 மனை ஒதுக்கீடுதாரர்கள் கிரய பத்திரம் பெற்று பயனடைவார்கள்.
சிறப்பு முகாம்
முதற்கட்டமாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட திருவான்மியூர் நரிக்குறவர் காலனியின் 70 ஒதுக்கீடுதாரர்கள் மற்றும் மாதவரம் சாஸ்திரி நகரின் 94 ஒதுக்கீடுதாரர்கள் என மொத்தம் 164 நபர்களின் மனைகளுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருவான்மியூர் நரிக்குறவர் காலனிக்கு நவம்பர் 12-ந்தேதியிலும், மாதவரம் சாஸ்திரிநகருக்கு 13-ந்தேதியிலும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய தலைமை அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஒதுக்கீடுதாரர்களிடம் இருந்து மனுக்கள் நேரடியாக பெறப்படும்.
உரிய ரசீதுகள்
ஒதுக்கீடுதாரர்கள் அல்லது வாரிசுதாரர்கள் தாங்கள் அளிக்கும் மனுவுடன் ஒதுக்கீடு ஆணை நகல், இருப்பிட சான்றுகளாக உணவு பங்கீடு அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்கள் இணைக்க வேண்டும்.
வாரிசுதாரர்களாக இருந்தால் ஒதுக்கீடுதாரரின் இறப்பு சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் அசல் மற்றும் மனைக்கு முழுகிரயம் செலுத்திய ரசீது, கடன் பெற்றிருந்தால் கடன் தொகை செலுத்திய வாரிய ரசீது நகல்களை இணைத்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story