மேட்டுப்பாளையம் -கோவை இடையே ‘மெமு’ ரெயில் சேவை - நிலைய மேலாளர் தொடங்கி வைத்தார்


மேட்டுப்பாளையம் -கோவை இடையே ‘மெமு’ ரெயில் சேவை - நிலைய மேலாளர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Nov 2019 3:45 AM IST (Updated: 1 Nov 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் -கோவை இடையே ‘மெமு’ ரெயில் சேவையை நிலைய மேலாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம்- கோவை இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார பயணிகள் ரெயில் நேற்று முதல் ‘மெமு’ ரெயிலாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சேவையை ரெயில் நிலைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மலை ரெயில் பெட்டி பொறியாளர் முகமது அஸ்ரப், சுகாதார ஆய்வாளர் நந்துலால் மீனா, மக்கள் நலப்பேரவை அமைப்பாளர் அரங்கசாமி, ரெயில்வே பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ராஜேந்திரன், பேராசிரியர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘மெமு’ ரெயில் சேவை குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த மெமு ரெயில் தினசரி 4 முறை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கும், மீண்டும் கோவையில் இருந்து 4 முறை மேட்டுப்பாளையத்திற்கும் சென்று திரும்பும்.

இந்த பயணிகள் ரெயில் என்ஜின் ஒவ்வொரு முறையும் முன்னும் பின்னும் மாற்றி மாற்றி பொருத்தி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது தனி என்ஜின் பொருத்தப்பட்டு மெமு ரெயிலாக மாற்றப்பட்டு உள்ளது. இனி ஒவ்வொரு முறையும் என்ஜினை பொருத்தும் நேரம் மற்றும் எரிபொருள் செலவு மிச்சமாகும்.

இந்த ரெயிலை அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். இதில் அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் அடுத்து எந்த நிலையம் வரப்போகிறது என்பதை அறிவிக்கும் வசதியும் உள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை- மேட்டுப்பாளையம் இடையே நேற்று சேவை தொடங்கப்பட்ட மெமு ரெயிலில் ஏராளமான பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர்.

Next Story