ஆட்சி முடியும் வரைதான் அ.தி.மு.க. இருக்கும் - டி.டி.வி. தினகரன் சொல்கிறார்


ஆட்சி முடியும் வரைதான் அ.தி.மு.க. இருக்கும் - டி.டி.வி. தினகரன் சொல்கிறார்
x
தினத்தந்தி 2 Nov 2019 4:15 AM IST (Updated: 2 Nov 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சி முடியும் வரைதான் அ.தி.மு.க. என்ற கட்சி இருக்கும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். திருவாரூரில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர்,

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் பார்க்கலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்து உள்ளதாக கூறுகிறீர்கள். புலிகேசி பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்லி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இதையெல்லாம் காமெடி சீன் ஆக நீங்கள் பார்த்து விட்டு போகலாம்.

இந்த ஆட்சி இருக்கும் வரை மட்டுமே அ.தி.மு.க. என்ற கட்சி இருக்கும். நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்ட மாதிரி இந்த ஆட்சி முடிந்த பிறகு அ.தி.மு.க.வில் யாரும் இருக்க மாட்டார்கள். ஆட்சி முடிந்த பிறகு பதில் சொல்வதற்கு கூட ஒருவரும் இருக்க மாட்டார்கள். காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஓடிவிடுவார்கள்.

அமைச்சர்கள் ஆட்சி இருக்கும் வரையில் அரசு பணத்திலும், மக்களின் வரிப்பணத்திலும் வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி பார்த்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. டாக்டர்கள் மிரட்டப்பட்டதாலும், பிரித்தாலும் சூழ்ச்சியாலும் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். டாக்டர்களின் கோரிக்கை நியாயமானது. அவற்றை அரசு நிறைவேற்றி தர வேண்டும். சிறுவன் சுஜித் உயிரிழந்த விவகாரத்தில் பொதுமக்களும், அரசும் இனி விழிப்புணர்வோடு இருந்து செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் பேச தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story