மாவட்ட செய்திகள்

சாத்தூர் அருகே மாயமானவர் விவகாரத்தில் திருப்பம்: கூலித்தொழிலாளியை கொன்று புதைத்தது அம்பலம் + "||" + Twist on the Magician: The revelation that the mercenary was killed and buried

சாத்தூர் அருகே மாயமானவர் விவகாரத்தில் திருப்பம்: கூலித்தொழிலாளியை கொன்று புதைத்தது அம்பலம்

சாத்தூர் அருகே மாயமானவர் விவகாரத்தில் திருப்பம்: கூலித்தொழிலாளியை கொன்று புதைத்தது அம்பலம்
மாயமான கூலித்தொழிலாளி கொன்று புதைக்கப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக அவரது மனைவி, மகன் மற்றும் மகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஸ்ரீரங்காபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சையம்மாள்(45). இவர்களுக்கு சுரேஷ்(28), என்ற மகனும் பிரியா(23) என்ற மகளும் உள்ளனர். சமையல் வேலை செய்து வரும் சுரேஷுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி விட்டது. பிரியாவுக்கு திருமணமாகி விட்டது.

கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுப்புராஜ் மாயமானார். பல நாட்களாக காணாததால் சுப்புராஜின் சகோதரர்கள் அவரை தேடத்தொடங்கினர். தொடர்ந்து பிச்சையம்மாளிடம் விவரம் கேட்டு வந்த நிலையில் அவர், தனது கணவர் வேலை தேடி கேரளாவுக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார். ஆனாலும் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர்.

வெளியூர் சென்ற சுப்புராஜ் மாதக்கணக்கில் வீடு திரும்பாததால் அவரது சகோதரர்களுக்கு சந்தேகம் வலுத்தது. சுப்புராஜ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதினர். இந்த நிலையில் சுப்புராஜின் வீட்டின் அருகே குழி தோண்டி பின்னர் மூடப்பட்டு இருப்பது தெரிந்தது. சமீபத்தில் பெய்த மழையினால் இந்த அறிகுறி தென்பட்டது.

இதுகுறித்து நேற்று சாத்தூர் தாலுகா போலீசில் சுப்புராஜின் சகோதரர் கணேசன் புகார் செய்தார். தனது சகோதரர் குறித்து பலமுறை பிச்சையம்மாளிடம் கேட்டும் முறையாக பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டிற்கு வெளியே கழிவறை அருகே சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு இடத்தை தோண்டிப்பார்க்க முடிவு செய்யப்பட்டது. போலீசாரின் முன்னிலையில் அங்கு தோண்டினர். சுமார் 3 அடி ஆழம் தோண்டியபோது அங்கு பாதி எரிந்த நிலையில் எலும்புகள் தென்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த இடத்தை தோண்டுவதை நிறுத்தி விட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இன்று (சனிக்கிழமை) தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் அந்த இடத்தை தொடர்ந்து தோண்டிப்பார்க்க முடிவு செய்யப்பட்டது. அங்கு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

இதுதொடர்பாக பிச்சையம்மாள், அவரது மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

சம்பவத்தன்று கணவர் வீட்டில் இருந்து பிரியா தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். இரவில் பிச்சையம்மாள் தனது மகன், மகளுடன் வீட்டில் இருந்துள்ளார். நள்ளிரவில் சுப்புராஜ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடலை வீட்டின் அருகே இரவோடு இரவாக குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த தகவலை 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

சுப்புராஜின் உடலை குழிக்குள் போட்டு எரித்து இருக்கலாம் என்று கருதுவதாகவும் முழுமையாக தோண்டி எடுத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த கிராமம் முழுக்க காட்டுத்தீ போல பரவியது. உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டியபோது அந்த ஊரே அங்கு திரண்டு இருந்தது. மேலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...