மாவட்ட செய்திகள்

புதுச்சேரி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தனி மருத்துவமனை முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல் + "||" + For organ transplantation Separate hospital Chief-Minister Narayanasamy Information

புதுச்சேரி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தனி மருத்துவமனை முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தனி மருத்துவமனை முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
புதுச்சேரி மக்கள் பயன்பெறும் வகையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென தனி மருத்துவமனை அமைக்க அரசு நிலம் ஒதுக்கி கொடுத்துள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,

புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் தேசிய கொடி ஏற்றி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நேரடியான ஆட்சி 1947-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பின் 3 ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுக் காரர்கள் வசம் இருந்த சந்திரநாகூர் 1950-ம் ஆண்டு விடுதலை பெற்று மேற்கு வங்கத்துடன் இணைந்தது. நாம் நம்முடைய வீரம் செறிந்த விடுதலை போராட்டத்தின் வாயிலாக 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி விடுதலை பெற்றோம்.


இந்த வரலாற்று நினைவுகளை கொண்டாடும் வகையில் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் புதுச்சேரியை நம்மிடம் விட்டு விட்டு எந்த இடத்தில் இருந்து கப்பலில் சென்றார்களோ அதே இடத்தில் நமது தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதுச்சேரியில் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சியை எதிர்த்து அரசியல் தலைவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு காலகட்டங்களில் நடத்திய போராட்டங்களை நினைக்கும் போது நெஞ்சம் பூரிப்படைகிறது. புதுச்சேரி விடுதலைக்கு வித்திட்ட வீர மறவர்களையும், அவர்களின் தியாகத்தையும் நினைத்து போற்றுவது நமது கடமையாகும். அவர்களுக்கு எனது வீர வணக்கங்களை புதுவை மாநில மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுவை விடுதலை பெற்ற பின்னர் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்திருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக புதுவை மாநிலத்தின் வளர்ச்சி, உயர்வு எல்லாம் மதசார்பற்ற ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த போது நிகழ்ந்தவை என்பதை எண்ணிப்பார்க்கையில் பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

புதுச்சேரி மாநிலம் தற்போது கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. தென்னிந்திய அளவில் புதுவை ஒரு கல்வி கேந்திரமாக மாறியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஒரு ரூபாய் பஸ் பாஸ் திட்டத்தின் கீழ் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி முறையே 9, 8 சதவீதம் உயர்ந்துள்ளது. 2017-18ம் ஆண்டில் தேசிய அளவில் தூய்மை பள்ளிகளுக்கான விருதில் நமது புதுவை மாநிலத்தில் 7 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நமது மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மத்திய தர நிர்ணய வரிசையில் அகில இந்திய அளவில் 6-வது இடத்தை பெற்றுள்ளது.

புதுவை லாஸ்பேட்டையில் உள்ள பல்நோக்கு உள்ளரங்கு அருகில் ரூ.12 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட மகளிர் விளையாட்டு விடுதி கட்டி முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் இங்கேயே தங்கி தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் அளிக்கும் வகையில் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் புதுவை மாநிலம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. 93.1 சதவீதம் குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசி போடப்படுகிறது. சுமார் 99.98 சதவீதம் குழந்தை பிறப்பு மருத்துவமனைகளிலேயே நடக்கிறது.

புதுச்சேரி மக்கள் பயன்பெறும் வகையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு என தனியாக ஒரு மருத்துவமனை அமைக்க சேதராப்பட்டில் 50 ஏக்கர் நிலத்தை ஜிப்மர் நிர்வாகத்துக்கு அரசு அளித்துள்ளது. தேவைப்படுவோருக்கு மாற்று உறுப்பு பொருத்தும் உயர் மருத்துவ சிகிச்சை இங்கு அளிக்கப்படும். ஏனாம் பகுதி மக்களுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க ஜிப்மர் மருத்துவமனையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதற்காக ஒரு பல்நோக்கு மருத்துவமனை கட்ட ரூ.48 கோடியும், ஏனாம் பொது மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.90 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. காரைக்கால் பகுதியில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை கட்ட புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரிவான திட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.