தவறான அறுவை சிகிச்சை செய்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் உறவினர்கள் தர்ணா


தவறான அறுவை சிகிச்சை செய்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் உறவினர்கள் தர்ணா
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2019-11-03T01:59:52+05:30)

பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் எல்லகுட்டூரை சேர்ந்தவர் ராஜா (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி நவமணி (36). இவர்களுக்கு மோனிசா என்ற மகளும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் 14-ந் தேதி நவமணிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் நவமணிக்கு குடல் இறக்கம் நோய் உள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு பின்னர் நவமணியின் வயிற்று பகுதி வீங்கிய நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த போது நவமணிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் வயிறு வீங்கியுள்ளது என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உறவினர்கள் தர்ணா

இந்த நிலையில் நவமணியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து எடப்பாடியில் உள்ள அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே கலெக்டர் ராமன் எடப்பாடி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக வந்தார். அப்போது நவமணியின் உறவினர்கள் அங்கு சென்று கலெக்டரிடம் இது தொடர்பாக புகார் மனு அளித்தனர். அதில், தவறான அறுவை சிகிச்சை செய்த ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story