100 நாட்களில் எடியூரப்பா மக்களுக்கு என்ன செய்தார்? கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது குமாரசாமி பேட்டி


100 நாட்களில் எடியூரப்பா மக்களுக்கு என்ன செய்தார்? கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 3 Nov 2019 4:30 AM IST (Updated: 3 Nov 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பாவை பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். எடியூரப்பா டெல்லிக்கு சென்றால் அவரை சந்திப்பது இல்லை. இது அவருக்கு மட்டும் இழைக்கப்படும் அவமானம் அல்ல, ஒட்டுமொத்த கர்நாடக மக்களுக்கு ஏற்படும் அவமானம் ஆகும்.

வட கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகியுள்ளன. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும். இந்த அரசுக்கு தொந்தரவு கொடுத்தால் மக்களின் நிலை என்னவாகும். இந்த அரசு கவிழ்ந்து, ஜனாதிபதி ஆட்சி வந்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்குமா?.

இதை மனதில் வைத்து தான் பா.ஜனதா அரசை கவிழவிட மாட்டேன் என்று சொன்னேன். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவில் சேருவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் கூறவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு நான் இதை கூறினேன். ஏனென்றால் நான் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு மக்கள் படும் கஷ்டங்களை நேரில் கண்டேன். அந்த மக்களுக்கு அரசின் உதவிகள் முழுமையான அளவில் கிடைக்கவில்லை.

மத்திய-மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இதற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள வெள்ள நிவாரண நிதியே சாட்சி. வருவாய்த்துறை மந்திரி இருக்கிறாரா? என்று சந்தேகமாக உள்ளது. அவர் எத்தனை மாவட்டங்களுக்கு நேரில் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்?. எத்தனை முறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டங்களை நடத்தினார்?.

தேசிய அளவிலும், கர்நாடகத்திலும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் நிலையான அரசு இருந்தாலும், பொருளாதார வளர்ச்சி மோசமாக உள்ளது. கர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும் கூட மாநில அரசு அதற்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. இன்னும் சில நாட்களில் அரசு கவிழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று மந்திரி ஒருவரே கூறியுள்ளார். இவ்வாறு மந்திரி பேசுவதால், அதிகாரிகள் எப்படி பணியாற்றுவார்கள்?.

பா.ஜனதா அரசுக்கு எதிராக நான் மென்மையான போக்கை பின்பற்றுவதாக சொல்கிறார்கள். தொலைபேசி ஒட்டுகேட்பு, தனியார் நகைக்கடையின் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் இருந்து தப்பிக்க நான் இவ்வாறு செயல்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது. இதை முன்பு கூறினேன், இப்போதும் சொல்கிறேன்.

மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் கடன்கள் தள்ளுபடி செய்வதாக மாநில அரசு அறிவித்தது. இதுவரை அந்த கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை. முதல்-மந்திரி மற்றும் அதிகாரிகள் இடையே சரியான புரிந்துணர்வு இல்லை. இந்த பா.ஜனதா அரசு அமைந்து இன்றுடன் (அதாவது நேற்று) 100 நாட்கள் ஆகிறது. இந்த 100 நாட்களில் முதல்-மந்திரி எடியூரப்பா மக்களுக்கு என்ன செய்தார்?. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது?.

சிக்பள்ளாப்பூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க அடிக்கல் நாட்ட எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். அதற்கு நிதி ஒதுக்குவது எப்போது?. இடைத்தேர்தலுக்கு பிறகு அதை எடியூரப்பா கண்டுகொள்ள மாட்டார். வட கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக தான் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வேண்டாம் என்று கூறுகிறேன்.

சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றாலும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. அதனால் இப்போது தேர்தல் தேவையா?. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் முழுமையாக கிடைத்துவிட்டால் எடியூரப்பா அரசை ஆதரிக்க நான் தயாராக உள்ளேன். எங்கள் கட்சியை விட்டு வெளியே செல்வதாக சில எம்.எல்.ஏ.க்கள் கூறுகிறார்கள். விலக முடிவு செய்துள்ளவர்களை தடுக்க முடியுமா?.

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றால் அதை எதிர்கொள்ள ஜனதா தளம்(எஸ்) தயாராக உள்ளது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடன் தள்ளுபடி செய்தது குறித்து எங்கள் கட்சி தொண்டர்கள் வீடு,வீடாக சென்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை மலேசியாவுக்கு அழைத்து செல்லவில்லை. எனது மகன் திரைப்பட விஷயமாக நான் லண்டன் செல்கிறேன். வருகிற 8-ந் தேதி கர்நாடகம் திரும்புகிறேன். எங்கள் கட்சியில் அதிருப்தி இருப்பது உண்மை. அது தற்போது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எடியூரப்பா மக்களுக்கு நல்லது செய்யும் எந்த பணியையும் செய்யவில்லை.

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். எனக்கு எதிராக எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். நோய் என்ன என்பதை சொன்னால் தானே தகுந்த மருந்து கொடுக்க முடியும்.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா பேசிய சில முக்கியமான தகவல்கள் அடங்கிய வீடியோ மற்றும் ஆடியோ பேச்சை சுப்ரீம் கோர்ட்டில் வழங்குகிறோம். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story