திருமங்கலம் மேம்பாலத்தில், லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் நண்பர் பலி - மற்றொருவர் படுகாயம்


திருமங்கலம் மேம்பாலத்தில், லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் நண்பர் பலி - மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Nov 2019 4:00 AM IST (Updated: 3 Nov 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

பூந்தமல்லி,

சென்னை வில்லிவாக்கம், காமராஜ்நகர், அம்மன்குட்டை 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த்(வயது 20). இவர், பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இவருடைய நண்பர்கள் சதீஷ்(17) மற்றும் விஜய்(17). இவர்களில் சதீஷ், பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். திருமண நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவில் மீண்டும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு நோக்கி சென்றனர்.

மோட்டார்சைக்கிளை பிரசாந்த் ஓட்டினார். அவருக்கு பின்னால் விஜய், சதீஷ் இருவரும் அமர்ந்து இருந்தனர். திருமங்கலம் மேம்பாலத்தில் இவர்கள் சென்றபோது, அங்கு சாலையோரத்தில் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது.

இதனை கவனிக்காமல் அதிவேகத்தில் வந்த மோட்டார்சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயம் அடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பிரசாந்த் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சதீஷ், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான பிரசாந்த், விஜய் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதன் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story