தமிழக பதிவெண் லாரி மீது தனியார் பஸ் மோதல்: டிரைவர் உள்பட 3 பேர் நசுங்கி சாவு; 17 பேர் படுகாயம்


தமிழக பதிவெண் லாரி மீது தனியார் பஸ் மோதல்: டிரைவர் உள்பட 3 பேர் நசுங்கி சாவு; 17 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 9:11 PM GMT)

துமகூரு அருகே நேற்று காலையில் தமிழக பதிவெண் கொண்ட லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதியது. இதில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் நசுங்கி இறந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெங்களூரு,

பெலகாவியில் இருந்து பெங்களூரு நோக்கி தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் நேற்று காலையில் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 38 பயணிகள் இருந்தனர். நேற்று காலையில் அந்த பஸ் துமகூரு மாவட்டம் உருகெரே அருகே ரங்காபுராவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்ற தமிழக பதிவெண் கொண்ட லாரியை முந்தி செல்ல பஸ் டிரைவர் முயற்சித்தார். அப்போது அவருடைய கட்டுப்பாட்டை இழந்த பஸ், லாரியின் பின்புறம் மோதியது. இதனால் லாரியும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. மேலும் லாரி மீது மோதிய தனியார் பஸ்சின் முன்புறமும் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் பயணிகள் 15 பேரும், லாரி டிரைவர், கிளனர் ஆகியோரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்தவுடன் துமகூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பஸ்சில் பயணித்த பெலகாவி மாவட்டம் சிக்கோடியை சேர்ந்த ராமப்பா எலேபள்ளி (வயது 43) தஸ்துல்லா (30), பஸ் டிரைவர்-கிளனரான பெங்களூரு மைசூரு ரோடுவை சேர்ந்த பஜால்உல்லா (29) ஆகியோர் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று ரங்காபுராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story