தொழில் அதிபர் வீட்டில் ரூ.28 லட்சம் நகைகள் திருடிய பெண், வேலைக்காரர் கைது


தொழில் அதிபர் வீட்டில் ரூ.28 லட்சம் நகைகள் திருடிய பெண், வேலைக்காரர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2019 9:52 PM GMT (Updated: 3 Nov 2019 9:52 PM GMT)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.28 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய பெண், வீட்டு வேலைக்காரர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சாந்தாகுருசை சேர்ந்தவர் ரிஷிராஜ். தொழில் அதிபர். இவரது வீட்டில் கார் பகுதியை சேர்ந்த கமல் வாகே(வயது 27) என்பவர் வீட்டு வேலைகளை செய்து வந்தார். இந்தநிலையில் ரிஷிராஜின் மனைவி கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக அவர் வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.28 லட்சம் மதிப்பிலான நகைகளை எடுத்து வந்து, வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி ரிஷிராஜின் மனைவி பீரோவை திறந்து பார்த்தபோது, நகைகள் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் கணவர் ரிஷிராஜிடம் கூறினார். இதன்பேரில் அவர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய் தார். அப்போது, பக்கத்து வீட்டில் வேலை செய்து வந்த சினேகா(40) என்ற பெண் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் ரிஷிராஜின் வீட்டில் வேலை செய்த கமல் வாகேவுக்கும் திருட்டில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த கமல் வாகே மற்றும் சினேகாவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story