நலவாரியம் மூலம் மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை - தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு
மீனவர் நலவாரியம் மூலம் மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சி.ஐ.டி.யு. தலைவர் செலஸ்டின் கூறினார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் நேற்று காலை தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் சுமார் 10 கோடி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் மத்திய அரசு தனியாக மீன்துறை அமைச்சகம் அமைக்கவில்லை.
சமீபத்தில் பிரதமர் மோடி, மீன்துறை அமைப்பதாக அறிவித்தார். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் மீனவர்களுக்கு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படுவது இல்லை. மத்திய அரசு மீன்பிடி தொழிலை சீரழிக்கும் வகையில் தேசிய மீன்பிடி மற்றும் ஒழுங்குமுறை மேலாண்மை சட்டம் 2019 மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். பெரிய நிறுவனங்கள் வளம் பெறுவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதனை கண்டிக்கிறோம்.
மாநில அரசு மீனவர் நலவாரியம் மூலம் ஒரு மீனவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கவில்லை. இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சுனாமிக்கு பிறகு பல்வேறு மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த கிராமங்களை கண்டறிந்து கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கணக்கெடுத்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு செல்லும் மீனவர்களுக்கு புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் குறித்த தகவல்கள் சரிவர கிடைப்பது இல்லை. இதனால் செயற்கைகோள்கள் மூலம் வானிலை தகவல்களை மீனவர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு மீன்உற்பத்தி அதிக அளவில் அன்னிய செலாவனியை ஈட்டி தருகிறது. ஆகையால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உள்நாட்டு மீனவர்களுக்கு குளங்களை குத்தகைக்கு விட வேண்டும்.
தேசிய மீனவர் சேமிப்பு நிவாரண திட்டத்தை மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மாநில செயலாளர் அந்தோணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story