திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சம், காவி துண்டு அணிவிப்பு அர்ஜூன் சம்பத் கைதாகி விடுதலை


திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சம், காவி துண்டு அணிவிப்பு அர்ஜூன் சம்பத் கைதாகி விடுதலை
x
தினத்தந்தி 6 Nov 2019 11:15 PM GMT (Updated: 6 Nov 2019 6:47 PM GMT)

தஞ்சை அருகே அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சம், காவி துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் இரவு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் தென்னிந்திய வள்ளுவர் குல சங்கம், திருவள்ளுவர் தெருவாசிகள் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது.

கடந்த 6-ந் தேதி இந்த திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமதித்தனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது கட்சி நிர்வாகிகளுடன் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டிக்கு நேற்று காலை வந்தார். பின்னர் அவர், திருவள்ளுவர் சிலை இருந்த இடத்துக்கு சென்று பீடத்தின் மீது ஏறி திருவள்ளுவருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை போக்க பரிகார பூஜைகள் செய்வதாக கூறி சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டை அணிவித்த அவர், தான் கொண்டு வந்திருந்த ருத்ராட்ச மாலைகளை திருவள்ளுவர் சிலைக்கு அணிவித்து, நெற்றியில் திருநீறு பூசி சூடம் ஏற்றி வழிபாடு செய்தார். அப்போது அருகே நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் திருக்குறளை வாசித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது சம்பவ இடத்தில் ஓரிரு போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்ததால் இந்து மக்கள் கட்சியினரின் இந்த செயலை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அர்ஜூன் சம்பத் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

எனவே அர்ஜூன் சம்பத்தை கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அர்ஜூன் சம்பத் எங்கே சென்று இருக்கிறார்? என போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதிக்கு சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் தலைமையிலான போலீசார், கும்பகோணத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ராஜராஜ சோழன் சமாதிக்கு மாலை அணிவித்து விட்டு வெளியே வந்த அர்ஜூன் சம்பத், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, மாநில செயலாளர் கார்த்திக்ராவ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து பிள்ளையார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் அர்ஜூன் சம்பத் உள்பட 3 பேர் மீதும் 153(கலகம் செய்ய தூண்டுதல்), 153ஏ(1)(ஏ) (மத, இன, மொழி, சாதி, சமயம் தொடர்பான விரோத உணர்வுகளை தூண்ட முயற்சி செய்தல்), 153(ஏ)(பி) (பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் இரவு 7 மணி அளவில் போலீஸ் நிலையத்திலேயே சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்ஜூன் சம்பத்துக்கு போலீசார் நோட்டீசு வழங்கினர்.

முன்னதாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த தமிழ் தேசிய பாதுகாப்பு கழகத்தினர் திடீரென தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். உடனே இந்து மக்கள் கட்சியினர் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இரு தரப்பினரும் மாறி, மாறி கோஷம் எழுப்பியதால் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானது. இதை பார்த்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

முன்னதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளுவர் தமிழ் சமுதாயத்தின், இந்து சமுதாயத்தின் அடையாளம். இந்த திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது என்பது தமிழ் சமுதாயம், இந்து சமுதாயம் அவமதிக்கப்பட்டதற்கு சமம். திருவள்ளுவருக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், கேரளாவிலும் கோவில் இருக்கிறது. திருவள்ளுவரை நாயன்மார்களில் ஒருவராக நினைத்து வணங்கி வருகிறோம்.

சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தான் நிர்வாகம் செய்கிறது. திருவள்ளுவர் உருவம் இது தான் என திராவிட இயக்கங்களால் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பாகவே திருவள்ளுவர் ருத்ராட்சம், திருநீறு அணிந்து தான் காணப்பட்டுள்ளார். நமது பண்டைய கால கல்வெட்டு ஆதாரங்கள் இதற்கு சான்று.

பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் எல்லாம் திருவள்ளுவரை போற்றுகிறார். தாய்லாந்து நாட்டின் மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு பிரதமர் மோடியால் வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறளை வாசித்து விளக்கமும் கொடுத்து இருக்கிறார். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உள்நோக்கத்துடன் பா.ஜ.க.வும், இந்து அமைப்புகளும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதாக ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். ஸ்டாலினின் விமர்சனத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது உலகம் முழுவதும் இருக்கும் இந்து தமிழர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும்.

திருவள்ளுவருக்கு வெள்ளை ஆடை அணிவித்து வேணுகோபால் சர்மா வரைந்த படத்தை அரசு வெளியிட்டு இருக்கிறது. திருவள்ளுவர் உண்மையான உருவத்தில் வழிபாட்டுக்குரியவராக திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து இருந்துள்ளார். அதனால் தான் நாங்கள் பூஜை செய்து இருக்கிறோம்.

இனிமேல் திருவள்ளுவர் சிலையை அமைக்கும்போது திருநீறு, ருத்ராட்சத்துடன் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சரையும், பிரதமரையும் கேட்டு கொள்கிறேன். திருக்குறளை தேசிய நூலாக அடையாளப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story