மும்பையில் 144 தடை உத்தரவு; போலீசார் தீவிர கண்காணிப்பு


மும்பையில் 144 தடை உத்தரவு; போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 Nov 2019 12:28 AM GMT (Updated: 7 Nov 2019 12:28 AM GMT)

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளதை அடுத்து, மும்பையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மும்பை,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வெளியிட உள்ளது. தீர்ப்பு வெளியாகிறபோது, நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசுக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதன்படி மராட்டியத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் பெருமளவில் வன்முறை நடந்ததால், அதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர். இதனால் மாநில தலைநகர் மும்பை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த தடை உத்தரவு வருகிற 18-ந் தேதி வரை அமலில் இருக்கும் என மும்பை போலீஸ் தெரிவித்து உள்ளது.

நகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே மத தலைவர்களை அழைத்து பேசினார். அப்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே கூறியதாவது:-

அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு பிறகு யாரும் கொண்டாட்டத்திலோ, கண்டன நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது.

மும்பை போலீசின் சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு மற்றும் சைபர் பிரிவு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக கண்காணிக்க உள்ளது.

இதில், ஆட்சேபணைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வதந்திகளை நம்ப கூடாது. வதந்தி பரப்பப்படுவது பற்றியும், சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story