மாவட்ட பஞ்சாயத்து என்ஜினீயர் பணி இடைநீக்கம்; மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா உத்தரவு
வெள்ள நிவாரண பணிகளுக்காக ஒதுக்கிய ரூ.21 கோடியை கையாடல் செய்த குடகு மாவட்ட பஞ்சாயத்து என்ஜினீயரை பணி இடைநீக்கம் செய்து மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா உத்தரவிட்டுள்ளார்.
குடகு,
குடகு மாவட்டம், மடிகேரியில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கனமழை- வெள்ளத்தால் குடகு மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் தரைமட்ட பாலம், மேம்பாலங்களும் வெள்ள நீரில் சிக்கி சேதமடைந்துள்ளன. இதனால் சாலை, மேம்பாலம் சீரமைப்பு உள்ளிட்ட வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கியது.
ஆனால் இந்த நிதி மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தின் வங்கி கணக்கில் இருந்து திடீரென்று மாயமானது. அதாவது மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் சாலை மேம்பாட்டு துறை என்ஜினீயராக உள்ள ஸ்ரீகண்டய்யா என்பவர் கையாடல் செய்து தனது வங்கி கணக்கிற்கு ரூ.21 கோடியை மாற்றி இருப்பு வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து அறிந்த மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி லட்சுமிபிரியா சம்பவம் பற்றி மடிகேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே வெள்ள நிவாரண பணிகளுக்காக ஒதுக்கிய ரூ.21 கோடியை என்ஜினீயர் கையாடல் செய்த விவரம் குறித்து கர்நாடக கிராமவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர், அந்த துறை மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா ஆகியோருக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா, வெள்ள நிவாரண நிதியை கையாடல் செய்த என்ஜினீயர் ஸ்ரீகண்டய்யாவை பணி இடைநீக்கம் செய்து, உரிய விசாரணை நடத்தும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டார். இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
Related Tags :
Next Story