பூச்சி அத்துப்பேடு பெட்ரோல் நிலைய கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது - ரூ.1 லட்சம் பறிமுதல்


பூச்சி அத்துப்பேடு பெட்ரோல் நிலைய கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது - ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-07T23:54:46+05:30)

பூச்சி அத்துப்பேடு பெட்ரோல் நிலைய கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே பூச்சி அத்துப்பேடு கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையத்தில் கடந்த மாதம் 13-ந்தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பெட்ரோல் நிலைய ஊழியர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் தனிப்படை போலீசார் கடந்த 23-ந்தேதி இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேல், சதீஷ் ஆகியோர் வெங்கல் அணைக்கட்டு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது விரட்டி சென்று பிடித்தனர்.

அப்போது சக்திவேல், சதீஷ் இருவரும் படுகாயம் அடைந்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர், சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த மற்றொருவரான சோழவரம் ஒன்றியம், பெருமாள் அடிபாதம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது23) என்பவர் வெங்கல் அருகே கோமக்கம்பெடு என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். தப்பி ஓடிய அவர் கீழே விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அவரை திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story