குடிமராமத்து பணியில் கண்மாய்களை ஆழப்படுத்தவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
மாவட்டத்தில் நடந்த குடிமராமத்து பணியில் கண்மாய்களை ஆழப்படுத்தாமல் பெயரளவிற்கு கரைகளை மட்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விருதுநகர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் நீர்வளத்தை மேம்படுத்தவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கண்மாய்களை சீரமைக்க உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 65 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 161 சிறு பாசன கண்மாய்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், 900 ஊருணிகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில் பருவமழை தொடங்கியதால் மராமத்து பணிகளை நிறுத்தி வைத்து வருகிற ஜனவரி மாதம் முதல் பணிகளை தொடர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீத பணிகளே முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 10 சதவீத பணிகள் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் விருதுநகரில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் குடிமராமத்து பணிகள் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் விஜயமுருகன் கூறியதாவது:-
குடிமராமத்து பணியில் கண்மாய்களை ஆழப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் கண்மாய்களை ஆழப்படுத்தவில்லை. இனிவரும் காலங்களிலாவது மராமத்து செய்யும் போது கண்மாய்களை ஆழப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் கரைகள் எந்திரம் மூலம் முறையாக பலப்படுத்தப்படவில்லை.
இதனால் லேசான மழை பெய்தால் கூட கரைகளில் போடப்பட்டுள்ள மண் கரைந்தோடி கரைகள் சேதப்படும் நிலை உள்ளது. மேலும் வரத்துக்கால்வாய்கள் மராமத்து செய்யப்படவில்லை. வரத்துக்கால்வாய்கள் மராமத்து செய்யப்பட்டால் தான் கண்மாய்களுக்கு நீர்வரத்துக்கு வாய்ப்பு ஏற்படும். எனவே வரத்துக்கால்வாய்களையும் மராமத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story