கர்நாடக பிரீமியர் லீக்கில் சூதாட்டம்: முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கவுதம், அப்ரார் காஜி கைது


கர்நாடக பிரீமியர் லீக்கில் சூதாட்டம்: முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கவுதம், அப்ரார் காஜி கைது
x
தினத்தந்தி 8 Nov 2019 12:26 AM GMT (Updated: 8 Nov 2019 12:26 AM GMT)

கர்நாடக பிரீமியர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கவுதம், அப்ரார் காஜி ஆகியோரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மெதுவாக பேட்டிங் செய்வதற்காக ரூ.20 லட்சம் வாங்கியது தெரியவந்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2009-ம் ஆண்டில் இருந்து கர்நாடக பிரீமியர் லீக் (கே.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 8-வது கே.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்தது.

7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் உப்பள்ளி (ஹூப்ளி) டைகர்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் பல்லாரி டஸ்கர்சை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் உப்பள்ளி நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பல்லாரி அணி 20 ஓவர்களில் 144 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

இந்த ஆண்டில் கே.பி.எல். போட்டி மீது சூதாட்ட சர்ச்சை வெடித்தது. குறிப்பிட்ட சில வீரர்கள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கக் கூடிய வகையில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி விசாரணையை முடுக்கி விட்ட பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளரான அலி அஷ்பாக், சூதாட்ட தரகர் பாவேஷ் பக்னா, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் வினு பிரசாத், அந்த அணியின் பேட்ஸ்மேன்களான விஸ்வநாதன், நிஷாந்த் சிங் ஆகியோரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சி.எம்.கவுதம், ஆல்-ரவுண்டர் அப்ரார் காஜி ஆகியோர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

முதல்தர கிரிக்கெட் வீரரான 33 வயதான சி.எம்.கவுதம் இந்திய ‘ஏ’ அணிக்காகவும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார்.

ரஞ்சி கிரிக்கெட்டில் ராபின் உத்தப்பா, மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், வினய்குமார் போன்ற நட்சத்திர வீரர்களுடன் இணைந்து கர்நாடக அணியில் ஆடியிருக்கிறார். சொந்த மாநில அணியோடு 9 ஆண்டுகள் பயணித்த சி.எம்.கவுதம் இந்த சீசனில் கர்நாடகா அணியில் இருந்து விலகி கோவா அணிக்கு மாறினார். முதல்தர போட்டியில் 94 ஆட்டங்களில் பங்கேற்று 10 சதங்கள் உள்பட 4,716 ரன்கள் சேர்த்துள்ளார். இன்று தொடங்கும் சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டிக்கான கோவா அணியின் கேப்டனாக கவுதம் நியமிக்கப்பட்டு இருந்தார். கைது எதிரொலியாக அவரது ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டு, உடனடியாக கோவா அணியில் இருந்தும் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.

ஆல்-ரவுண்டரான 30 வயதான அப்ரார் காஜி, பேட்டிங் மட்டுமின்றி சுழற்பந்தும் வீசக்கூடியவர். முதல்தர கிரிக்கெட்டில் முதலில் கர்நாடக அணிக்காக ஆடிய அப்ரார் காஜி, பிறகு வடகிழக்கு மாநிலமான நாகலாந்து அணிக்கு மாறினார். கடந்த சீசனில் மிடில் வரிசையில் இறங்கி மூன்று முறை 150 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் 17 ஆட்டங்களில் ஆடி 1,136 ரன்களும், 48 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

இந்த சீசனில் மிசோரம் அணிக்கு தாவினார். சமீபத்தில் நடந்த விஜய்ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மிசோரம் அணிக்காக கால் பதித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் கே.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார். மந்தமாக பேட்டிங் செய்வதற்காக ரூ.20 லட்சத்தை சூதாட்ட தரகர்களிடம் இருந்து வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இறுதி ஆட்டத்தில் கவுதம் 37 பந்தில் 2 பவுண்டரியுடன் 29 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். காஜி 6 பந்தில் 13 ரன் எடுத்து ரன்-அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும் அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சூதாட்ட தரகர்கள் 2 பேர் துபாயில் பதுங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இவர்கள் 2 பேரையும் கைது செய்வதற்கு வசதியாக அவர்கள் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேருக்கும் சர்வதேச கிரிக்கெட் அணிகளில் விளையாடும் வீரர்களுடன் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பெலகாவி பாந்தர்ஸ் அணியை இடைநீக்கம் செய்து கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்போம் என்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.


Next Story