பெரம்பலூர் மாவட்டத்தில், 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி - கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்


பெரம்பலூர் மாவட்டத்தில், 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி - கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Nov 2019 10:45 PM GMT (Updated: 8 Nov 2019 3:02 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணியை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,

பெரம்பலூர், 

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பின் நோக்கம் சொந்த நுகர்வு அல்லாத வேளாண் மற்றும் வேளாண் அல்லாத பொருட்கள், பல்வேறு உற்பத்தி பொருட்கள், வினியோகம், விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செய்யும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் பற்றிய விவரங்களை சேகரிப்பதே ஆகும். நமது மாவட்டத்தில் பொருளாதாரக் கணக்கெடுப்பு பணியினை பொது சேவை மையம் என்ற தனியார் அமைப்பு களப்பணி மற்றும் 100 சதவீதம் மேற்பார்வை பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. 

தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியல் துறை மற்றும் தேசிய புள்ளியல் அலுவலகம் மூலம் இப்பணி கண்காணிக்கப்படுகிறது. பொருளாதாரக் கணக்கெடுப்பில் குடும்ப தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப் பிரிவு, செல்போன் எண், செய்யும் தொழில், சுயதொழில் முதலீடுகள், நிரந்தர கணக்கு எண், பெறப்பட்ட கடன் தொகை, மற்றும் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் செல்போன் செயலி மூலம் சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் கணக்கெடுப்பு மையத்திற்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது. 

எனவே, கணக்கெடுப்பாளர்கள் எவ்வித விடுதலுமின்றி சரியான தகவல்களை முழுமையாக அளிக்கவேண்டும். இதன் மூலம் தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அளவில் முக்கிய பொருளாதாரக் கொள்கை முடிவுகளை அரசு எடுக்க இயலும். எனவே, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் இக்கணக்கெடுப்பு தொடர்பாக சரியான விவரங்களை களப்பணியாளர்களுக்கு அளித்து முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்தார்.

இதில் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை துணை இயக்குனர் தனபால், கோட்டப் புள்ளியல் உதவி இயக்குனர் ஆறுமுகம், பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளர்கள் ரகுராம், சங்கர், மாவட்ட தொழில் மைய அலுவலர் அன்பழகன், புள்ளியல் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story