கடந்த 2 மாதங்களாக, அந்தரத்தில் தொங்கும் ஊட்டி-கூடலூர் சாலை - உடனடியாக சீரமைக்க கோரிக்கை


கடந்த 2 மாதங்களாக, அந்தரத்தில் தொங்கும் ஊட்டி-கூடலூர் சாலை - உடனடியாக சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2019 4:15 AM IST (Updated: 8 Nov 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி- கூடலூர் சாலை கடந்த 2 மாதங்களாக அந்தரத்தில் தொங்குகிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், மரங்கள் முறிந்து விழுந்தும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். அப்போது மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையான பைக்காரா சாலையின் ஒரு பகுதி தடுப்புச்சுவருடன் சரிந்து விழுந்தது. இதனால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் இருந்தது.

அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை சாய்வாக அடுக்கி தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தாலும் மழை விட்டு, விட்டு பெய்து வந்ததால் அவ்வப்போது சாலை சேதமாகி கொண்டே இருந்தது. இதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்தது. இந்த பணி பாதி முடிவடைந்து உள்ளது. இன்னும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டி உள்ளதோடு, சாலையில் இருந்து உயரமாக கட்டினால் மட்டுமே சாலை மீண்டும் சேதம் அடையாமல் தடுக்க முடியும்.

அப்பகுதியில் பாதி சாலை துண்டிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கும் அவலம் நீடிக்கிறது. மேலும் சாலை கடும் சேதம் அடைந்து உள்ளதால் இருபுறமும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் ஒருபுறமாக மட்டுமே சென்று வருகிறது. இதனால் முதலாவதாக செல்லும் வாகனத்துக்கு எதிரே ஏதேனும் வாகனம் வந்தால் திரும்பி பின்னோக்கி சென்றால் தான் வழிவிட முடியும். இதனால் அங்கு அடிக்கடி வாகன ஓட்டிகளிடையே குழப்பம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. அப்பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் அதிர்வு ஏற்படுகிறது. இதனால் உள்ளுர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சாலையாக உள்ளது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோழிக்கோடு, நிலம்பூர், மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர கிராமப்பகுதிகளுக்கு அரசு பஸ்கள் சென்று வருகிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வருகிறார்கள். அந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும்.

இதற்கிடையே பைக்காரா பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இருவழிப்பாதையில் வாகனங்கள் ஒரு வழியில் மட்டுமே சென்று வருகின்றன. புதியதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே சாலை சேதம் அடைந்து அபாயகரமாக உள்ள பகுதியில் இருபுறங்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்த சாலையை உடனடியாக சீரமைப்பதோடு, தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story