வரத்து குறைவால் மும்பையில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு; பொதுமக்கள் கவலை


வரத்து குறைவால் மும்பையில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு; பொதுமக்கள் கவலை
x
தினத்தந்தி 9 Nov 2019 12:18 AM GMT (Updated: 9 Nov 2019 12:18 AM GMT)

வரத்து குறைவால் மும்பையில் காய்கறி விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் மழைக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து நாசிக், அவுரங்காபாத், கோலாப்பூர் உள்பட ஒரு சில இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையினால் விளைநிலத்தில் போடப்பட்டு இருந்த பயிர்கள் நாசமானது. இதனால் வெங்காயம், திராட்சை, சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கு உள்பட பல காய்கறிகளின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது.

மேலும் உற்பத்தி குறைந்ததால் கடந்த ஒரு வாரமாக வாஷி மொத்த மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மும்பைக்கு வினியோகிக்கப்படும் காய்கறி விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது.

இதனால் மும்பையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. மேலும் மற்ற காய்கறிகளான தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்டவையின் விலையும் கிடு கிடு வென உயர்ந்து உள்ளது. இது குறித்து வாஷி மொத்த மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளதால், கடந்த வாரத்தில் கிலோ ரூ.73-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் தற்போது ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதேபோல பச்சை பட்டாணி கிலோ ரூ.75-க்கும், தக்காளி ரூ.67-க்கும், காலிபிளவர் கிலோ ரூ.60-க்கும், கத்திரிக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேநிலைமை நீடித்தால் காய்கறிகளின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை. வரத்து அதிகரித்தால் தான் காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story