சர்வதேச திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் - கலெக்டர் ‌ஷில்பா தகவல்


சர்வதேச திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் - கலெக்டர் ‌ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 8:23 PM GMT)

சர்வதேச திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக, நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நெல்லை,

சீனாவில் உள்ள ‌ஷாங்காய் நகரில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக, தொடக்க நிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த திறன் போட்டியில் பங்கேற்க https:worldskillsindia.co.in என்ற இணையதளத்தில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

6 துறைகளில் உள்ள 47 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 25-ந்தேதி ஆகும். 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கல்வித்தகுதி பெற்றவர்கள், தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து கொண்டிருப்பவர்கள், பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்து கொண்டிருப்பவர்கள் அல்லது படித்து முடித்தவர்கள், தொழிற்சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகிய கால தொழிற்பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

மாவட்ட திறன் போட்டியானது அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் 10-ந் தேதிக்குள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தனிநபராகவோ அல்லது இரண்டு பேர் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் மையத்தில் வைத்து தங்களுக்கு வழங்கப்படும் கேள்வித்தாளில் உள்ள திறன் செய்முறை தேர்வை செய்ய வேண்டும்.

இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கின்ற மாநில அளவிலான திறன் போட்டியிலும், இதுபோல் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவர்கள் மண்டல, இந்திய மற்றும் உலகளவில் நடைபெறும் திறன் போட்டியில் கலந்து கொள்ளலாம். உங்களது தனித்திறனை வெளிப்படுத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story