பட்கல்லுக்கு கடத்திய ரூ.59.52 லட்சம் தங்கம் பறிமுதல்; வாலிபர் கைது


பட்கல்லுக்கு கடத்திய ரூ.59.52 லட்சம் தங்கம் பறிமுதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 9:16 PM GMT)

துபாயில் இருந்து சென்னை வழியாக பட்கல்லுக்கு கடத்திய ரூ.59.52 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு, 

பெங்களூருவில் இருந்து உடுப்பி மணிப்பால் நோக்கி செல்லும் கர்நாடக அரசு சொகுசு பஸ்சில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி செல்வதாக மங்களூருவில் உள்ள வருவாய் புலனாய்வு துணை இயக்குனர் ஸ்ரேயாசுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள், தங்கம் கடத்தலை தடுக்க தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.15 மணி அளவில் பெங்களூருவில் இருந்து உடுப்பி மணிப்பால் நோக்கி செல்லும் கர்நாடக அரசு சொகுசு பஸ் ஒன்று மங்களூரு பெஜாய் பஸ் நிலையத்துக்கு வந்தது.

அந்த பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது பயணி ஒருவர் சிகரெட் அட்டைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.59.52 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 515 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் உத்தரகன்னடா மாவட்டம் பட்கல்லை சேர்ந்த சிபகதுல்லா கோலா (வயது 31) என்பதும், அவர் தங்க கட்டிகளை கடத்தி கொண்டு துபாயில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வந்தார். பின்னர் சிங்கப்பூரில் இருந்து இணைப்பு விமானம் மூலம் தமிழ்நாடு சென்னைக்கு வந்தார். இதையடுத்து சென்னையில் இருந்து பஸ் மூலம் பெங்களூரு வந்த அவர், அங்கிருந்து அரசு பஸ்சில் உடுப்பி நோக்கி சென்றுள்ளார். உடுப்பிக்கு சென்றதும், அங்கிருந்து பட்கல்லுக்கு தங்கத்தை கடத்தி செல்ல சிபகதுல்லா திட்டமிட்டிருந்தார்.

இதையடுத்து அதிகாரிகள் சிபகதுல்லாவை கைது செய்தனர். இந்த கடத்தலில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்று சிபகதுல்லாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story