கர்நாடகத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் 13-ந் தேதி தீர்ப்பு ; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு


கர்நாடகத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் 13-ந் தேதி தீர்ப்பு ; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 12:00 AM GMT (Updated: 9 Nov 2019 9:29 PM GMT)

கர்நாடகத்தில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வருகிற 13-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது.

14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்தினார். கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 23-ந் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது.

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை 17 எம்.எல்.ஏ.க்கள் மீறியதாகவும், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு சபாநாயகரிடம் அக்கட்சிகளின் தலைவர்கள் கடிதம் கொடுத்தனர். அதை ஏற்று சபாநாயகர் ரமேஷ்குமார், 1. முனிரத்னா (ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி), 2. பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), 3. ரோஷன் பெய்க் (சிவாஜிநகர்), 4. எஸ்.டி.சோமசேகர் (யஷ்வந்தபுரம்), 5. கோபாலய்யா (மகாலட்சுமி லே-அவுட்), 6. பிரதாப்கவுடா பட்டீல் (மஸ்கி), 7. ஸ்ரீமந்த்பட்டீல் (காக்வாட்), 8. ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), 9. மகேஷ் குமடள்ளி (அதானி), 10. பி.சி.பட்டீல் (இரேகூர்), 11. நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), 12. எச்.விஸ்வநாத் (உன்சூர்), 13. சிவராம் ஹெப்பார் (எல்லாப்பூர்), 14. சங்கர் (ராணிபென்னூர்), 15. ஆனந்த்சிங் (விஜயநகர்), 16.எம்.டி.பி.நாகராஜ் (ஒசக்கோட்டை), 17. சுதாகர் (சிக்பள்ளாப்பூர்) ஆகிய 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 17 பேரும் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் சுமார் ஒரு வாரம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோட்டகி, கர்நாடக காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், ஜனதா தளம்(எஸ்) சார்பில் ராஜீவ்தவான் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குறித்து எடியூரப்பா பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆடியோவை சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள அம்சங்களை கவனத்தில் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தீர்ப்பு தாமதமானால், தாங்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்று தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் அச்சம் அடைந்தனர். அதனால் அவர்கள், இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், புதிய மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அதன்படி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது 13-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். இந்த நிலையில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்கில் வருகிற 13-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பை பொறுத்தே திட்டமிட்டப்படி இடைத்தேர்தல் நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்பது தெரியவரும்.

Next Story