டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை - அதிகாரி தகவல்


டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 9:36 PM GMT)

பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் டெங்கு, சிக்கன்குனியா தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் நீரில் கொசு உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க, தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீட்டிற்கு சுற்றுப்புறத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை மழைநீர் தேங்கா வண்ணம் அப்புறப்படுத்தவும் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள, உணவகம், விடுதி, திருமண மண்டபம், திரையரங்கம் மற்றும் அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி இல்லாமல் இருக்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வின் போது, இந்த இடங்களில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டத்தின்படி கடும் நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் தண்ணீர் தேங்காவண்ணம் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story