ஆலங்குளம் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் சாவு
ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அம்பலவாசகர் தெருவை சேர்ந்தவர் கணேசன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் முத்துசெல்வம்(வயது 4). இவன் நேற்று காலையில் தனது பாட்டியுடன் தோட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டராஜா என்பவர் வந்து கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிளில் மணிகண்டராஜாவின் பாட்டி பேச்சியம்மாள்(70) என்பவர் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
அப்போது அந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் முத்துசெல்வம் மீது மோதி கவிழ்ந்தது. இதனால் முத்துசெல்வமும், மோட்டார் சைக்கிளில் இருந்த பேச்சியம்மாளும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
இதையடுத்து 2 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசெல்வம் பரிதாபமாக இறந்தான். காயம் அடைந்த பேச்சியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவன் முத்துசெல்வத்தின் உடலை பார்த்து பெற்றோர்் கதறி அழுதனர். இது பார்ப்போரை கண்கலங்க செய்தது. இந்த விபத்து குறித்து சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story