காட்டுயானைகளிடம் இருந்து கடைகளை பாதுகாக்க மின்வேலி அமைத்த வியாபாரிகள்


காட்டுயானைகளிடம் இருந்து கடைகளை பாதுகாக்க மின்வேலி அமைத்த வியாபாரிகள்
x
தினத்தந்தி 11 Nov 2019 11:00 PM GMT (Updated: 11 Nov 2019 9:55 PM GMT)

கூடலூர் அருகே காட்டுயானைகளிடம் இருந்து கடைகளை பாதுகாக்க வியாபாரிகள் மின்வேலி அமைத்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்குள்ள வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை காட்டுயானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ந‌‌ஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அது நீண்ட காலத்துக்கு பலனிப்பது இல்லை.

இந்த நிலையில் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வுட் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதனருகில் பொதுமக்களின் குடியிருப்புகள், தொட்ட தொழிலாளர்களின் வீடுகள் உள்ளன. இங்கு சாலையோரத்தில் அமைந்து உள்ள கடைகளை, இரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள் உடைத்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

இதனை தடுக்க வியாபாரிகள் புதிய யுக்தியை கையாண்டு உள்ளனர். அதன்படி கடைகளை சுற்றிலும் மின்வேலி அமைத்து உள்ளனர். இரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளிடம் இருந்து கடைகளை பாதுகாக்கவே மேற்கண்ட நடவடிக்கை எடுத்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பார்வுட் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் காட்டுயானைகள் நுழைவது தொடர்ந்து வருகிறது. அவை கடைகளை உடைத்து, உள்ளே இருக்கும் பொருட்களை தின்றும், சிதறடித்தும் அட்டகாசம் செய்கின்றன. இதனால் பெரும் ந‌‌ஷ்டத்துக்கு ஆளாகி வருகிறோம். வனத்துறையினரிடம் தெரிவித்தால், அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை.

இதனால் நாங்களே எங்கள் கடைகளை பாதுகாக்க முன்வந்து உள்ளோம். கடைகளை சுற்றி மின்வேலி அமைத்து உள்ளோம். இதனால் இரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள் கடைகளில் அருகில் வருவதை தவிர்த்து விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story