தூத்துக்குடியில் பெண் கொலை: கைதான ஆட்டோ டிரைவர் சிறையில் அடைப்பு


தூத்துக்குடியில் பெண் கொலை: கைதான ஆட்டோ டிரைவர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 5:20 PM GMT)

தூத்துக்குடியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி, 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 32). இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு கணவருடன் விவாகரத்து ஆனதையடுத்து கவிதா தூத்துக்குடிக்கு வந்தார். இங்கு எட்வின் (29) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் குமரன்நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். பின்னர் கடந்த 8-ந்தேதி அவர்கள் விவேகானந்தர் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். 9-ந்தேதி மதியம் கவிதா வீட்டில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜோதிபாசு நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கருப்பசாமி (27) கவிதா வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவிதாவுடன் தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட தகராறில் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து பின்னர் அவரது உடலை தீவைத்து எரித்ததை கருப்பசாமி ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

இந்த நிலையில் போலீசார் கருப்பசாமியை நேற்று தூத்துக்குடி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 26-ந்தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் கவிதாவின் இறப்பு குறித்து தெளிவாக குறிப்பிடப்படாததையடுத்து அவரது உடல் பாகங்கள் விஸ்ரா ஆய்வுக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story