‘குழந்தைகள் தினத்தில் பிள்ளைகளுடன் ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள்’ பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் விழிப்புணர்வு


‘குழந்தைகள் தினத்தில் பிள்ளைகளுடன் ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள்’ பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 13 Nov 2019 10:45 PM GMT (Updated: 13 Nov 2019 8:02 PM GMT)

செல்போன் உள்பட மின்சாதன பொருட்களை தவிர்த்து குழந்தைகள் தினத்தில் பிள்ளைகளுடன் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் விழிப்புணர்வு செய்கிறது.

சென்னை, 

குழந்தை வளர்ப்புத்துறையில் முன்னணியில் இருக்கும் ‘பேரண்ட் சர்க்கிள்’ என்ற தனியார் நிறுவனம் பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கிறது.

அதாவது, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந்தேதி (இன்று) செல்போன் உள்பட மின்சாதன பொருட்களை தவிர்த்து பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை முன்வைத்து இருக்கின்றனர். இதை கடைப்பிடிக்க பள்ளிக்கல்வி துறையும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறது.

இதுகுறித்து பேரண்ட் சர்க்கிள் நிறுவனத்தின் நிறுவனரும், மேலாண்மை இயக்குனருமான நளினா ராமலட்சுமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்குங்கள்

பெற்றோர், குழந்தை இடையேயான உறவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மின்சாதன பொருட்களின் ஆளுமை அதிகரித்துவிட்டது. அதில் இருந்து சற்று விடுபட்டு குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கிறோம். இது எங்களுடைய முதற்கட்ட முயற்சி தான்.

குழந்தைகள் தினமான நாளை (இன்று) இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பெற்றோர் தங்களுடைய வீட்டில் பயன்படுத்தும் அனைத்து வகையான செல்போன் உள்பட மின்சாதன பொருட்களை தவிர்த்துவிடுங்கள். அந்த நேரத்தில் பெற்றோர் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களுடன் விளையாடுங்கள், உணவு அருந்துங்கள், நன்றாக பேசுங்கள்.

உறுதிமொழி

இதை அந்த ஒரு நாள் மட்டும் செய்வதோடுமட்டுமில்லாமல், தொடர்ச்சியாக தினமுமோ அல்லது வாரத்தில் ஒரு நாட்களிலோ கடைபிடித்தால் குழந்தைகளுடனான உறவு வலுப்பெறும். அவ்வாறு நீங்கள் உறுதிமொழி எடுத்து செய்த அனுபவத்தை www.ga-d-g-et-f-r-e-e-h-our.com என்ற இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story