சங்கரன்கோவிலில் பயங்கரம்: மூதாட்டியை கொன்று 16 பவுன் நகை கொள்ளை


சங்கரன்கோவிலில் பயங்கரம்: மூதாட்டியை கொன்று 16 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 16 Nov 2019 5:00 AM IST (Updated: 16 Nov 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று 16 பவுன் நகைகளை கொள்ளை அடித்த கும்பல், உடலுக்கு தீவைத்துச் சென்றதால் பரபரப்பு நிலவுகிறது.

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் முல்லை நகரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 75). இவர், சங்கரன்கோவிலில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் ஜெயக்குமார் தனது மனைவி, குழந்தைகளு டன் சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் வசித்து வருகிறார்.

முல்லைநகர் வீட்டில் சந்திரனும், ராஜேஸ்வரியும் வசித்து வந்தனர். நேற்று காலையில் சந்திரன் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெளியே சென்று விட்டார். இதனால் வீட்டில் ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.இந்த நிலையில் வெளியே செல்வதற்காக பக்கத்து வீட்டுக்காரர் தனது வீட்டை பூட்டினார். அவரது வீட்டின் சாவியை வழக்கம் போல் அருகே உள்ள ராஜேஸ்வரியிடம் கொடுப்பதற்காக சென்றார்.

அப்போது, வீட்டின் முன்பு இருந்த இரும்புக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து, ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது.

அவர் விரைந்து வந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இரும்புக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது, வீட்டுக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் தீவைத்து எரிக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த 16 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் கதறி அழுதார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நெல்லையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் வரை ஓடிவிட்டு, மீண்டும் கொலை நடந்த வீட்டுக்கு திரும்பி வந்து விட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த படுகொலை குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ‘வீட்டில் ராஜேஸ்வரி தனியாக இருந்ததை அறிந்த கும்பல் ஒன்று வீட்டுச்சுவர் ஏறி குதித்து புகுந்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் சென்று ராஜேஸ்வரியின் தலையில் கம்பு அல்லது இரும்பு கம்பி போன்ற ஏதோ ஒரு பொருளால் அடித்துக் கொலை செய்துள்ளனர். அவர் அணிந்து இருந்த 16 பவுன் நகைகளை கொள்ளை அடித்து அந்த கும்பல், உடலை தீவைத்து எரித்துள்ளனர்.

அரைகுறையாக எரிந்த நிலையில் உடலை அங்கேயே போட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று 16 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story