தூக்குப்போட்டு பொதுப்பணித்துறை என்ஜினீயர் தற்கொலை


தூக்குப்போட்டு பொதுப்பணித்துறை என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Nov 2019 3:45 AM IST (Updated: 16 Nov 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் ஸ்ரீராம்நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 52), இவர் பொதுப் பணித்துறையில் சுகாதாரக் கோட்டத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு வைத்தியநாதன் என்ற மகன் உள்ளார்.

வைத்தியநாதன் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் (டிசம்பர்) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவசங்கரன் தான் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் செலவழித்து அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வீடு வாங்கியதாகவும், அதனால் மகன் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் அவர் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிவசங்கரனின் மனைவி சாந்தி நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்றுக் காலை அவர் தனது கணவருக்கு போன் செய்தார். பல முறை போன் செய்தும் கணவர் எடுத்து பேசாததால் சந்தேகம் அடைந்த அவர் அருகில் உள்ள தனது தம்பி ராஜாராமனுக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

அதைத் தொடர்ந்து ராஜாராமன் உடனடியாக சிவசங்கரனின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டு வராண்டாவில் அக்காள் கணவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அது குறித்து ராஜாராமன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவசங்கரனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

மகன் திருமண செலவுக்கு பணம் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story