சுய தொழில் தொடங்குபவர்கள் உற்பத்தி பொருட்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் - கலெக்டர் ரத்னா பேச்சு


சுய தொழில் தொடங்குபவர்கள் உற்பத்தி பொருட்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் - கலெக்டர் ரத்னா பேச்சு
x
தினத்தந்தி 16 Nov 2019 10:30 PM GMT (Updated: 16 Nov 2019 1:58 PM GMT)

சுய தொழில் தொடங்குபவர்கள் உற்பத்தி பொருட்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு முகாமில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் அரியலூரில் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கும் நபர்கள், தங்களது உற்பத்தி பொருட்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். 

தரமான பொருட்களை உற்பத்தி செய்து சரியான முறையில் சந்தைபடுத்துவதன் மூலம் அதிக லாபம் பெறலாம். செய்யும் தொழிலில் நேர்மையும், உண்மையான உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு வழி வகுக்கும். மேலும் இம்மாவட்டம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளதால், வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டும் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்.

மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்கள் பெற அரியலூர் வாலாஜாநகரத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது தொலைப்பேசி எண்ணான 04329–228555–ஐ தொடர்பு கொள்ளலாம் என்றார். பின்னர் கலெக்டர் ரத்னா பாரத ஸ்டேட் வங்கி பொன்பரப்பி கிளையின் சார்பாக 7 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் கடனுதவிக்கான வங்கி வரைவோலைகளையும், கனரா வங்கி திருமழப்பாடி கிளையின் சார்பாக 8 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவிக்கான வங்கி வரைவோலைகளையும் வழங்கினார்.

முகாமில் 160 தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில், அரியலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகராஜன், இளநிலை செயல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட கனரா வங்கி தலைமை மேலாளர் முரளி மோகன், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ரமேஷ், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் சகுந்தலா மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story