கம்பியில் துணி காயப்போட்ட போது மின்சாரம் தாக்கி பெண் பலி


கம்பியில் துணி காயப்போட்ட போது மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 17 Nov 2019 4:15 AM IST (Updated: 16 Nov 2019 9:01 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாணாபுரம், 

வாணாபுரம் அருகே உள்ள வரகூர் பகுதியை சேர்ந்தவர் குப்பன். அவருடைய மனைவி சித்ரா (வயது 40). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் சித்ரா துணியை துவைத்து காய வைப்பதற்காக அருகில் இருந்த கம்பி மீது போட்டதாக தெரிகிறது.

அப்போது அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து சித்ரா தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சித்ரா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ராவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் வரகூர் பஸ் நிறுத்தம் அருகே சித்ராவின் உடலை வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணாபுரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கடந்த சில நாட்களாக உயர் மின் அழுத்தம் அதிகளவில் ஏற்படுகிறது என்றும், இதனை சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story