செய்யாறில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


செய்யாறில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Nov 2019 10:45 PM GMT (Updated: 17 Nov 2019 4:25 PM GMT)

செய்யாறில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அரசு இடத்தில் கட்ட நிதிஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யாறு, 

செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

அப்போது அவசர, அவசரமாக அப்பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் தொடங்கப்பட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்தவாசி, வெம்பாக்கம் மற்றும் செய்யாறு தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்குதல், வாகன தகுதி சான்று வழங்குதல், வாகன பதிவு உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் பயன்பாடு இல்லாமல் பூட்டியே வைத்துள்ள நிலையில் தனியார் கட்டிடத்திற்கு வாடகை கொடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

மேலும் ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்கள் பாதுகாப்பு இல்லாத தனியாருக்கு சொந்தமான காலிமனையில் வாகனத்தை இயக்குகின்றனர். தனியாருக்கு சொந்தமான காலிமனை என்பதால் முறையாக வழித்தடம் அமைக்காமல் தாறுமாறாக வாகனங்கள் ஓட்டுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சப்படுகின்றனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யாறில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் சாலையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சுமார் 1½ ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, அரசு புதிய கட்டிடம் கட்ட நிதிஒதுக்கீடு செய்து விரைவில் அலுவலக கட்டுமான பணிகளும், பயிற்சி மைதானமும் அமைத்து அரசு கட்டிடத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story