பரமத்திவேலூரில் 107 மகளிருக்கு ரூ.26¾ லட்சத்தில் அம்மா இருசக்கர வாகனம் - அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினார்கள்


பரமத்திவேலூரில் 107 மகளிருக்கு ரூ.26¾ லட்சத்தில் அம்மா இருசக்கர வாகனம் - அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினார்கள்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:15 PM GMT (Updated: 17 Nov 2019 6:04 PM GMT)

பரமத்திவேலூரில் 107 மகளிருக்கு ரூ.26¾ லட்சத்தில் அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினார்கள்.

பரமத்திவேலூர், 

பரமத்திவேலூரில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். சின்ராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சங்க பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4,915 பயனாளிகளுக்கு ரூ.40.7 கோடி கடனுதவிகளையும் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கமணி பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனுதவிகளை வழங்கினார். அதனடிப்படையில் விவசாயிகள் தாங்கள் வாங்குகின்ற கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தினால் வட்டி முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும் நகைக்கடன் குறைந்த வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகின்றது.

கூட்டுறவு வங்கிகளில் எளிதில் கடன் வழங்கப்படுகின்றது. ரூ.5,000 முதல் ரூ.50 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்படுகின்றன. சரியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு மீண்டும், மீண்டும் கடன் வழங்கப்படுகின்றது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வசதியான சாலைகள் போடப்பட்டுள்ளன.

மேலும் 2 அரசு கலைக்கல்லூரிகளையும், சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரிகளையும் அரசு வழங்கி உள்ளது. மருத்துவக்கல்லூரிக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கல்லூரி கட்டும் பணிகள் இன்னும் 2 மாத காலத்திற்குள் தொடங்கப்படுவதுடன் 2021-ம் ஆண்டிற்குள் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வேலூர் பேரூராட்சி மற்றும் பரமத்தி பேரூராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 107 உழைக்கும் மகளிருக்கு மொத்தம் ரூ.26 லட்சத்து 75 ஆயிரம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள். மேலும் 19 பேரூராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்களை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மிருணாளினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், இணைபதிவாளர்கள் யசோதாதேவி, ரவிக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் சுப்பிரமணி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் ராஜேந்திரன், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் திருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

Next Story