ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட இந்து அமைப்புகள் போலீசார் அனுமதி மறுத்ததால் கலைந்து சென்றனர்


ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட இந்து அமைப்புகள் போலீசார் அனுமதி மறுத்ததால் கலைந்து சென்றனர்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:30 PM GMT (Updated: 17 Nov 2019 8:44 PM GMT)

ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்புகள் திரண்டன. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் கலைந்து சென்றனர்.

ஊட்டி,

ஊட்டியில் ஆர்ப் பாட்டம் நடத்த இந்து அமைப்புகள் திரண்டன. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் கலைந்து சென்றனர்.

அனுமதி இல்லை

கிறிஸ்தவ அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். அப்போது இந்து முன்னணி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடம் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் பேசும்போது, ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் இந்து அமைப்புகள் சார்பில் ஒரு குழுவினர் நாளை(அதாவது இன்று) பேச உள்ளனர். எனவே கோ‌‌ஷம் போடாமல், ஆர்ப்பாட்டம் நடத்தாமல் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பின்னர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒத்திவைப்பு

நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத மாற்றத்தில் போதகர்கள் ஈடுபட்டு உள்ளனர். அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பல ஜெபக்கூடங்கள் நடைபெறுகிறது. பல இடங்களில் அனுமதி பெறாமல் மசூதிகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து இன்று(அதாவது நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது. இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து நாளை(திங்கட்கிழமை) மாலை கலெக்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்து முன்னணி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு காணப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சரவணன், ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story