வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டதால் இளையான்குடி ஊருணி நிரம்பியது


வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டதால் இளையான்குடி ஊருணி நிரம்பியது
x
தினத்தந்தி 17 Nov 2019 10:30 PM GMT (Updated: 17 Nov 2019 9:08 PM GMT)

வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டதால் பல வருடங்களாக நீரின்றி வறண்டு இருந்த இளையான்குடி ஊருணி நிரம்பியது.

இளையான்குடி,

இளையான்குடியில் உள்ள ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலுக்கு அருகே உள்ளது, தெய்வ புஷ்கரணை ஊருணி. கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள வீடுகள், அலுவலகம், மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஊருணியில் கலந்தது. இதுதவிர ஊருணியின் வரத்துக்கால்வாய்கள் சில தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதனால் மழையின் போது இந்த ஊருணிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் பல வருடங்களாக வறண்ட நிலையில் காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் இருந்து வந்தது. இந்நிலையில் ஊருணியை சுத்தம் செய்ய முடிவு செய்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் வி.வி.எஸ். நண்பர்கள் குழுவினர், தப்பாத்தை சாகுல்ஹமீது தலைமையில் ஊருணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சில வரத்துக்கால்வாய்களை புதிதாக அமைத்து மழைக்காலங்களில் இந்த ஊருணிக்கு தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து தற்போது ஊருணி நிரம்பி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:-

இந்த ஊருணி எவ்வித பராமரிப்பும் இல்லாமல் கழிவுநீர் மற்றும் குப்பைகள் சேரும் ஊருணியாக இருந்து வந்தது. இந்த நிலையில் இதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இந்த ஊருணியை சுத்தம் செய்ததால் தற்போது ஊருணி நிரம்பி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story