திருப்பூர் வெங்கமேடு அருகே, நல்லாற்றின் கரையோரம் கொட்டப்படும் சாயக்கழிவுகள் -சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம்


திருப்பூர் வெங்கமேடு அருகே, நல்லாற்றின் கரையோரம் கொட்டப்படும் சாயக்கழிவுகள் -சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:30 PM GMT (Updated: 17 Nov 2019 10:37 PM GMT)

திருப்பூர் வெங்கமேடு அருகே நல்லாற்றின் கரையோரம் கொட்டப்படும் சாயக்கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அனுப்பர்பாளையம், 

திருப்பூரில் முக்கிய நீர்நிலைகளாக நொய்யல் மற்றும் நல்லாறு பாய்கிறது. இதில் மழைக்காலம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் கழிவுநீர் மட்டுமே பாய்ந்து வருகிறது. இதேபோல் இந்த 2 ஆறுகளிலும் விடுமுறை நாட்கள், அதிகாலை நேரம் மற்றும் மழை பெய்யும் நேரங்களில் மழைநீருடன் சாயக்கழிவுநீரை திறந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரிண்டிங் பட்டறைகளில் சாக்கடை கால்வாயில் கழிவுநீரை திறந்து விடுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் வெங்கமேடு, ஆத்துப்பாளையம், பிச்சம்பாளையம் உள்பட நல்லாறு பாயும் இடங்களில் ஆற்றின் கரையோரம் ஏராளமான சாயக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நல்லாறு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார் கூறியதாவது:-

நீர்நிலைகளில் அடிக்கடி சாயக்கழிவு நீரை கலந்து விடுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் அங்கேரிபாளையம், வெங்கமேடு, ஆத்துப்பாளையம், பிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நல்லாற்றின் கரையோரம் சாயக்கழிவுகள் மற்றும் பிரிண்டிங் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் ஆற்றின் கரையோரம் கொட்டி விட்டு செல்லும் மர்ம ஆசாமிகள் கழிவுகளை தீ வைத்து எரித்தும் செல்கின்றனர்.

ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இதுபோன்று நீர்நிலைகளை மாசுப்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story