நாகர்கோவிலில், சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தொழில் அதிபர் கைது


நாகர்கோவிலில், சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2019 10:00 PM GMT (Updated: 18 Nov 2019 12:16 AM GMT)

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தொழில் அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முத்துமாரி தேவேந்திரன் (வயது 40). இவரும், ஏட்டு ரசல்ராஜூம் ஒரு புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாகர்கோவிலை சேர்ந்த தொழில் அதிபர் பூதலிங்கத்தின் (46) சர்வீஸ் சென்டருக்கு சென்றனர்.

அப்போது பூதலிங்கத்துக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதில் பூதலிங்கமும், அங்கிருந்த ஊழியர்கள் 3 பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி, கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தேவேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பூதலிங்கத்தை கோட்டார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட உள்ளூர் திட்டக்குழும உதவி இயக்குனர் அண்ணாதுரை (52) மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தொழில் அதிபர் பூதலிங்கம் நடத்தி வரும் கார் ஏஜென்சி ஷோரூமில் கார் வாங்குவதற்காக அவருடைய வங்கி கணக்குக்கு ரூ.4 லட்சத்து 88 ஆயிரம் செலுத்தினேன். பணம் செலுத்தி 2 மாதங்கள் ஆகியும் காரை டெலிவரி பண்ணாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் நம்பிக்கை மோசடி செய்து விட்டார்.

எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பூதலிங்கம், அவருடைய மனைவி ரேகா பூதலிங்கம் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தேவேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story