விளாத்திகுளம் தாலுகா, ஓ.துரைசாமிபுரத்தில் 6 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு - சீரான வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


விளாத்திகுளம் தாலுகா, ஓ.துரைசாமிபுரத்தில் 6 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு - சீரான வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Nov 2019 10:30 PM GMT (Updated: 18 Nov 2019 4:35 PM GMT)

விளாத்திகுளம் தாலுகா ஓ.துரைசாமிபுரத்தில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) வி‌‌ஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பாரதிநகர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாரதிநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கி கிடக்கும் மழைத்தண்ணீரை வெளியேற்றிவிட்டு சாலையை உயர்த்தி அமைக்க கோரிக்கை வைத்து இருந்தோம். தற்போது அந்த பகுதியில் முதன்மை சாலையாக உள்ள மீளவிட்டான் சாலையில் இருந்து பிரியும் 3 சாலைகளின் முகப்பில் மட்டுமே மண் அடித்து அரைகுறைவாக சீர் செய்யப்பட்டு உள்ளது.

பாரதி நகர் கிழக்கு பகுதியில் 2 உட்புற சாலைகளும், மேற்கு பகுதியில் 2 உட்புற சாலைகளும் மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியை முழுமையாக சீர் செய்து மழை நீரை வெளியேற்றி மோசமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநகர குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ’தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி காலனி மேற்கு பகுதியில் 10 ஆண்டுகளாக சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மக்கள் நலன் கருதி மழை நீரை வெளியேற்றி சாலை அமைக்கப்படாத பகுதிகளில் தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்றுகூறி இருந்தனர். அதே போல் ராஜகோபால் நகர் மற்றும் மகிழ்ச்சிபுரம் பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்ற கோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

சாயர்புரத்தை சேர்ந்த மச்சேந்திரன் என்பவர் கொடுத்த மனுவில், சாயர்புரம் மெயின் பஜாரில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இதற்கு மழை நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டால் மழை நீர் தேங்காது. அதே போல் அங்குள்ள கலை கல்லூரி, புளியநகர் பஸ் நிறுத்தம், மாதாகோவில் கெபி அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.

விளாத்திகுளம் தாலுகா ஓ.துரைசாமிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறு பழுதானதையடுத்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த பணி முடியவில்லை. இதனால் குடிநீர் விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த பணி முடிந்ததாக கிராம பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 6 மாதங்களாக எங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

ஆறுமுகநேரி திசைக்காவல் தெற்கு தெரு பொதுமக்கள் நலச்சங்கத்தினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அப்போது தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கொண்டு தராசு வைத்து அதில் அரிசி வழங்குவது போன்று நூதன போராட்டம் நடத்தினார். அதன் பின்னர் அவர் மனு கொடுத்தார். அந்த மனுவில், ஆறுமுகநேரி பேரூராட்சி திசைக்காவல் தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2013-14 கீழ் புதிதாக ரேசன் கடை கட்டப்பட்டது. அதனை அனிதா ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். ஆனால் அந்த ரேசன் கடை இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் வெகுதூரம் சென்று ரேசன் பொருட்களை வழங்கி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அந்த ரேசன் கடையை கொண்டு வர வேண்டும் என்று கூறி இருந்தார்.

திருச்செந்தூர் தாலுகா கீழதிருச்செந்தூர் தோப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கொடுத்த மனுவில், எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடத்தில் இதுவரை இடம் அளவு செய்து கல்போட்டு தரவில்லை. சர்வேயர் இல்லாததால் இடம் அளக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். எனவே எங்களுக்கு அந்த இடத்தை அளந்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

Next Story