மனநலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் ஆதரவற்று சுற்றி திரிந்தவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க புதிய முயற்சி


மனநலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் ஆதரவற்று சுற்றி திரிந்தவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க புதிய முயற்சி
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 6:54 PM GMT)

மனநலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் ஆதரவற்று சுற்றி திரிந்தவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க புதிய முயற்சி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிந்து வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து ரெயில்களிலோ, பஸ்களிலோ ஏறி திருச்சிக்கு வந்து ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சுற்றி திரிவதை காண முடியும். இதுபோன்ற ஆதரவற்றவர்களை அன்பாலயம் தொண்டு நிறுவனத்தினர் மீட்டு உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து பராமரித்து வருகிறார்கள்.

ஆனால் இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் இவர்களுடைய குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. அவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ எதேச்சையாக அவர்களை பார்க்க நேரும்போது, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து மீட்டு செல்கிறார்கள். மற்றபடி, இதுபோன்றவர்களை அவர்களுடைய குடும்பத்தினரிடம் சேர்ப்பது சவாலான காரியமாக இருந்து வருகிறது.

பூர்வீகத்தை கண்டறிய...

இந்தநிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில், மனநலம் பாதிக்கப்பட்டு அன்பாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 51 பேரின் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம், அன்பாலயம் நிறுவனர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பேசுகையில், “மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சொந்த ஊர், பெயர் எதுவுமே கூறத்தெரியாது. அப்படிப்பட்டவர்களின் பூர்வீகத்தை கண்டறிய இது ஒரு புதிய முயற்சி. இந்த முயற்சியில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய ரெயில்வே பாதுகாப்பு படையினர், விமானநிலையத்தில் பணியாற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், பாய்லர்ஆலை அதிகாரிகள் என பலர் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கையாளுவது மிகவும் கடினம்.

குடும்பத்தினரோடு சேர்க்க நடவடிக்கை

நாம் அவர்களுடைய நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தால் மட்டுமே ஏதாவது தகவல்களை கூறுவார்கள். ஆகவே மிகவும் கவனமாக அவர்களுடன் பேசி விவரங்களை பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட தகவல்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள காவல்துறையினரோடு தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்தி, அவர்களை குடு்ம்பத்தினரோடு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.

இதனை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு குழுக்களாக அமர வைத்து ஒவ்வொருவரும் எந்தெந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அவரவருக்கு தெரிந்த மொழிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பேசினார்கள். இதில் பங்கேற்ற 51 மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

கண்ணீர்விட்டு அழுத பெண்

மனநலம் பாதிக்கப்பட்ட, கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா கூறும்போது, “எனது கணவர் சரியில்லாததால் என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார். வசதியான குடும்பத்தை சேர்ந்த நான், கர்நாடகா மாநிலம் ஹுப்ளியில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், காலில் அடிபட்டதால் அந்த கடையில் இருந்து வேலையை விட்டு நிறுத்தி ரெயிலில் ஏற்றி விட்டதாகவும், இதனால் திருச்சி வந்தேன்” என்றும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் குடும்பத்தினர் கர்நாடகாவில் எந்த தெருவில் வசிக்கிறார்கள் என்பதை அவருக்கு சொல்ல தெரியவில்லை.

இதேபோல் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சீனம்மா கூறுகையில், எனது சொத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு உறவினர்கள் வீட்டை விட்டு விரட்டி விட்டார்கள். அதனால் ரெயிலில் திருச்சிக்கு வந்தேன் என்று தெரிவித்தார். ஆனால் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் அந்த பெண்ணின் வீடு உள்ள தெரு பெயரை கூற தெரியவில்லை. தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

புகைப்படத்தை அனுப்பி விசாரணை

மலையாளம் பேசக்கூடிய போலீஸ்காரர், மனநலம் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த ஒருவரிடம் பேசி அவர் வீடு உள்ள இடத்துக்குட்பட்ட போலீஸ் நிலையத்தை கண்டறிந்தார். பின்னர் அந்த நபரை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் தனது நண்பருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி விசாரிக்கும்படி கூறினார். இதேபோல் போலீசார் பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க பல்ேவறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டனர்.

Next Story