ஆறுமுகநேரியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை மனைவி இறந்த துக்கத்தில் சோக முடிவு


ஆறுமுகநேரியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை மனைவி இறந்த துக்கத்தில் சோக முடிவு
x
தினத்தந்தி 20 Nov 2019 4:15 AM IST (Updated: 20 Nov 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் மனைவி இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மடத்துவிளையைச் சேர்ந்தவர் லியோன் ஜோசப். இவருடைய மகன் ஜூடு (வயது 41). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி யாமினி. இவர்களுக்கு ஜெனி (8), செசினா (2) ஆகிய 2 மகள்களும், ஜெரின் (5) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த ஆண்டு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, யாமினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் யாமினியின் தாயார் கிரன்சி தன்னுடைய பேரக்குழந்தைகளை வளர்த்து வருகிறார். மனைவி இறந்த துக்கத்தில் ஜூடு மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஜூடு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்திரகாளி என்ற பவுன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, தற்கொலை செய்த ஜூடுவின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story