பராமரிப்பு பணிகள் நிறைவு: பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை பயன்பாட்டுக்கு வந்தது


பராமரிப்பு பணிகள் நிறைவு: பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை பயன்பாட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 7:54 PM GMT)

பராமரிப்பு பணி நிறைவடைந்ததையொட்டி, பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நேற்று முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

பழனி,

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், மலைக்கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு 3 மின் இழுவை ரெயில்களும், ஒரு ரோப்காரும் இயக்கப்படுகிறது. மின் இழுவை ரெயில் மூலம் கோவிலுக்கு செல்ல 9 நிமிடங்களும், ரோப்கார் மூலம் செல்வதற்கு 3 நிமிடங்களும் ஆகிறது. எனவே பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரோப்காரை பொறுத்தவரையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு நாளும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, கடந்த 14-ந்தேதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.

பராமரிப்பு பணி நிறைவு

ரோப்கார் நிலையத்தின் கீழ், மேல் தளங்களில் உள்ள அனைத்து எந்திரங்களிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரோப்காரில் உள்ள எந்திரங்கள் கழற்றி ஆய்வு செய்யப்பட்டதில் ‘சாப்ட்’ சக்கரத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த விரிசலை சரிசெய்ய பொறியாளர்கள் கோவில் நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக ‘சாப்ட்’ சக்கரத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணி நடந்து வந்தது. பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் ரோப்கார் சேவை பயன்பாட்டுக்கு வந்தது. முன்னதாக காலை ரோப்காருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு பக்தர்களின் பயன்பாட்டுக்காக ரோப்கார் இயக்கப்பட்டது. இதில் ரோப்கார் வல்லுனர் ரங்கசாமி, கோவில் பொறியாளர்கள் நாச்சிமுத்து, குமார், பார்த்திபன், கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரோப்கார் சேவை தொடங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story