புதுப்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது: மேலும் ஒருவருடன் தொடர்பு வைத்ததால் கொன்றதாக வாக்குமூலம்


புதுப்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது: மேலும் ஒருவருடன் தொடர்பு வைத்ததால் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 Nov 2019 4:30 AM IST (Updated: 22 Nov 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பெண்ணை கொன்று உடலை அமராவதி ஆற்றின் கரையோரம் வீசிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவருடன் தொடர்பு வைத்து இருந்ததால் கொன்றதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தாராபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த ஓட்டலில் அதே பகுதியை சேர்ந்த திருமங்கை (வயது 33) என்பவரும் வேலை செய்து வந்தார். இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் ராமபுதூரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மோகனூரில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதாக தனது கணவரிடம் திருமங்கை கூறிவிட்டு ஸ்கூட்டரில் சென்றார். அதன்பின்னர் அவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், அவருடைய செல்போன் மூலம் திருமங்கையை தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது திருமங்கையின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் தனது மனைவியின் நிலைமை என்ன ஆனதோ? என்று பயந்த ரமேஷ், தனது உறவினர்கள் உதவியுடன் திருமங்கையை தேடினார். ஆனாலும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மறுநாள், திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே கவுண்டப்பகவுண்டன்புதூரில் அமராவதி ஆற்றின் கரையோரம், திருமங்கை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவருடைய கைகள் துப்பட்டாவால் பின்னால் கட்டப்பட்டு இருந்தது. வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது. கழுத்து இறுக்கப்பட்டு இருந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மூலனூர் போலீசார் விரைந்து சென்று திருமங்கை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலையாளியை பிடிக்க தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா, போலீ்ஸ்காரர்கள் பூபதி, சரவணக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருமங்கையின் செல்போன் எண்ணுக்கு கடைசியாக பேசியது யார்? என்று விசாரித்தனர். அப்போது சேலம் மாவட்டம் அம்மாபேட்டை சோத்துநாயக்கன்காடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் தனபால் (24) என்பவர் பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், திருமங்கையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தனபாலை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கைதான தனபால் போலீசாரிடம் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

நான் நாமக்கல்லில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அறை எடுத்து தங்கி பொக்லைன் எந்திரம் ஓட்டி வந்தேன். அப்போது அங்குள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றபோது, அங்கு வேலை பார்த்த திருமங்கை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவரை எனது அறைக்கு அடிக்கடி வரவழைத்து இருவரும் நெருக்கமாக இருப்போம்.

இந்த நிலையில் திருமங்கைக்கும், ரமேசுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் எங்கள் இருவருக்கும் இடையே உள்ள கள்ளக்காதல் தொடர்ந்தது. இந்த நிலையில் திருமங்கைக்கும், வேறு ஒருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவரை கண்டித்தேன். அதை தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி சம்பவத்தன்று திருமங்கையை செல்போனில் தொடர்பு கொண்டு எனது அறைக்கு வருமாறு அழைத்தேன். அவரும் எனது அறைக்கு வந்தார். பின்னர் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது வேறு ஒருவருடன் தொடர்பு வைத்து இருப்பது குறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் மழுப்பலாக பதில் கூறியதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். அதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே துப்பட்டாவால் அவருடைய கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். அப்போது நள்ளிரவு ஆகி விட்டதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பின்னர் திருமங்கையின் கைகளை துப்பட்டாவால் கட்டி, உடலை போர்வையால் போர்த்தி, வணிக வளாகத்தில் இருந்து கீழே இறக்கி அங்கு நிறுத்தி வைத்து இருந்த வேனின் பின் இருக்கையில் வைத்தேன்.

அதன்பின்னர் திருமங்கையின் உடலை எங்கு வீசுவது என்று தெரியாமல் திணறினேன். பின்னர் வேனை அங்கிருந்து ஓட்டிக்கொண்டு கரூர் வழியாக வந்து மூலனூர் அருகே கவுண்டப்பகவுண்டன்புதூரில் அமராவதி ஆற்றின் கரையோரம் வந்ததும், உடலை அங்கு வீசி விட்டு சென்று விட்டேன். இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

திருமங்கையை கொலை செய்த தனபால் அவருடைய உடலை ஒரு வேனின் பின் இருக்கையில் வைத்து ஓட்டி வந்துள்ளார். அந்த வேன், நாமக்கலில் இருந்து புறப்பட்டு கரூர் வழியாக திருப்பூர் மாவட்ட எல்லையான மூலனூர் அருகே கவுண்டப்பகவுண்டன்புதூர் பகுதிக்கு வந்துள்ளது. இந்த 3 மாவட்ட எல்லைகளிலும் போலீஸ் சோதனை சாவடி உண்டு. அதில் போலீசாரும் பணியில் இருந்துள்ளனர். ஆனால் ஒரு சோதனை சாவடியில் கூட தனபால் ஓட்டி வந்த வேனை போலீசார் சோதனை செய்யவில்லை. இதனால் அவர் மிக எளிதாக சோதனை சாவடிகளை கடந்து மூலனூர் பகுதிக்கு வந்துள்ளது தெரியவந்தது.

Next Story