அ.தி.மு.க. அரசை கண்டித்து, விழுப்புரத்தில் கொட்டும் மழையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. அரசை கண்டித்து, விழுப்புரத்தில் கொட்டும் மழையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:15 PM GMT (Updated: 21 Nov 2019 7:26 PM GMT)

தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதை தடுக்க தவறிய அ.தி.மு.க. அரசை கண்டித்தும் விழுப்புரத்தில் கொட்டும் மழையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணையாறு திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அ.தி.மு.க. அரசை கண்டித்தும் நேற்று தமிழகத்தில் கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று காலை ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி அனைவரையும் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது விழுப்புரம் நகரில் மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் நனைந்தபடி கர்நாடக அரசையும், தமிழக அரசையும் கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பியபடி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கர்நாடக அரசு, தென்பெண்ணையாற்றின் பல இடங்களில் குழாய் பதித்து குடிநீர் எடுத்துச்செல்கிறது. தற்போது தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையில் அங்கு அணையை கட்டி குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது.

இதுபற்றி தமிழ்நாட்டை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளதோடு இதை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கும் அனுமதி கிடையாது என்று கூறியிருக்கிறது. கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் மத்திய அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதை தட்டிக்கேட்க திராணி இல்லாத அரசாகத்தான் அ.தி.மு.க. அரசு உள்ளது. கர்நாடக அரசை எதிர்த்து இங்குள்ள முதல்-அமைச்சர், அமைச்சர்கள் யாரும் வாய் திறப்ப தில்லை.

கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களும் தென்பெண்ணையாற்றை நம்பித்தான் உள்ளனர். அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டால் குடிப்பதற்கு தண்ணீர் வராது. எனவே கர்நாடக அரசு செய்யும் சூழ்ச்சிகளை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தீர்ப்பாணையம் அமைத்து எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே தீர்ப்பாயம் கேட்பதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து 3 அல்லது 5 நீதிபதிகளை கொண்ட அரசமைப்பு ஆணையத்தை உடனடியாக உருவாக்க கோரிக்கை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மாசிலாமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பு‌‌ஷ்பராஜ், ஏ.ஜி.சம்பத், மாரிமுத்து, செந்தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நமச்சிவாயம், பொருளாளர் ரவி, துணை செயலாளர்கள் வசந்தா, மலர்மன்னன், தெற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் கென்னடி உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Next Story