மாநில குறும்பட போட்டிக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த படைப்புகளை இளைஞர்கள் அனுப்பலாம் - கலெக்டர் தகவல்


மாநில குறும்பட போட்டிக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த படைப்புகளை இளைஞர்கள் அனுப்பலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:15 PM GMT (Updated: 21 Nov 2019 7:26 PM GMT)

மாநில குறும்பட போட்டிக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த படைப்புகளை இளைஞர்கள் அனுப்பலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் குறும்படங்களை ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களுக்கான மாநில அளவிலான போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போட்டியில் பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை இயக்குனர், சுற்றுச்சூழல் துறை, தரைதளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-600015 என்ற முகவரிக்கு அடுத்த மாதம்(டிசம்பர் மாதம்) 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் சென்றடையும் விதமாக அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்பப்படும் குறும்படமானது தமிழ் மொழியில் 2 நிமிடங்களுக்கு மிகாமலும், இதற்கு முன்பாக எந்தவொரு போட்டியிலும் கலந்துகொண்டு பரிசு பெறாததாகவும், சொந்த கரு மற்றும் கதையம்சம் கொண்டதாகவும், குறும்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எந்தவொரு தனி நபரையும் பிரதிபலிக்கும் விதமாக இல்லாமலும், அரசின் எந்தவொரு திட்டத்தையும் கேலி செய்வதாகவோ அல்லது விமர்சிப்பதாகவோ இல்லாமலும் இருத்தல் வேண்டும்.

ஒருவரே எத்தனை குறும்படங்களை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம். குழுவால் தேர்வு செய்யப்பட்டு முதல் 3 இடங்களை பெறும் குறும்படங்களுக்கு முறையே ரூ.7 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பரிசும், சான்றிதழும், விருதும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் குறும்படங்களுக்கு சுற்றுச்சூழல்துறை இயக்குனரே சட்டப்பூர்வ உரிமையாளர் ஆவார். மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்யவும் அனுமதி பெற்றவராவார்.

எனினும் குறும்படங்களில் அவற்றை தயாரித்தவரின் பெயர் திரையிடப்படும். மேலும் தேர்வு செய்யப்படும் குறும்படங்கள் சுற்றுச்சூழல் துறையின் வலைதளத்திலும், அரசின் பிறதுறைகளின் வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு, பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படுவது மட்டுமின்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பிற குழுக்களிடையேயும் திரையிடப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டு, மாநிலத்தின் பொதுவான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் அவற்றில் இருந்து பாதுகாத்தல், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வழிவகைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் குறும்படங்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமாக தயாரித்து அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story