பர்கூரில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: 578 பயனாளிகளுக்கு ரூ.4¾ கோடி கடன் உதவி கலெக்டர் வழங்கினார்


பர்கூரில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: 578 பயனாளிகளுக்கு ரூ.4¾ கோடி கடன் உதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:30 PM GMT (Updated: 21 Nov 2019 8:05 PM GMT)

பர்கூரில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 578 பயனாளிகளுக்கு ரூ.4¾ கோடி கடன் உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

பர்கூர்,

பர்கூர் துரைஸ் மகாலில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இந்த விழாவை மாவட்ட கலெக்டர் பிரபாகர், கூட்டுறவு கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் 578 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 71 லட்சத்து 52 ஆயிரத்து 890 மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

இந்த விழாவிற்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தர்மபுரி மத்திய கூட்டுவு வங்கி தலைவர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபாகரன் வரவேற்றார். இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ரேணுகா திட்ட விளக்கவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:- மாவட்டத்தில் உள்ள 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த மாதம் 31-ம் தேதி வரை ரூ. 77 கோடியே 60 லட்சம் மதிப்பில் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 168 கோடியே 54 லட்சம் மதிப்பில் நகை கடனும், தானிய ஈட்டு கடனாக ரூ. 2 கோடியே 96 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

கடன் உதவிகள்

இதே போல் கிரு‌‌ஷ்ணகிரி கூட்டுறவு நகர வங்கிகள் மூலம் 2019-20ம் நிதியாண்டில் டாப்செட்கோ டாம்கோ திட்டத்தின் மூலம் 386 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 54 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றம் வணிக கடன், வீடு கட்ட கடன் என பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் மாதையன், பால் வளத்தலைவர் குப்புசாமி, கூட்டுறவு அச்சக துணை தலைவர் முனியப்பன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெயபாலன், தேவேந்திரன், ஜெயராமன், நாகராஜ், நிலவள வங்கி தலைவர் சாகுல்அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story