சேலம் புதிய பஸ்நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு


சேலம் புதிய பஸ்நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 8:26 PM GMT)

சேலம் புதிய பஸ்நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் புதிய பஸ் நிலையத்தினை சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், பஸ் நிலைய முதல் தளத்தில் 18 ஆயிரத்து 397 சதுர அடி பரப்பளவில் 4 எண்ணிக்கையிலான வணிக உபயோக வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வணிக வளாகப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், நகைக் கடைகள், ஆயத்த ஆடை விற்பனை கடைகள், குளிரூட்டப்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய கடைகள் அமைக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நடைமேடை

இந்த சீரமைப்பு பணிகளின் கீழ் பஸ் நிலையத்தில்உள்ள 4 நடைமேடைகளில் உள்ள பஸ்கள் நிறுத்த மேற்பகுதிகளில் பழுதடைந்த பழைய சிமெண்டு அட்டைகளை அகற்றி, புதிய தீப்பிடிக்காத மேற்கூரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. நடை மேடைகளின் கான்கிரீட் மேல் தளத்தில், மேற்கூரை ஓடுகளை மாற்றியமைத்து, டைல்ஸ் ஒட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் நடைமேடைகளில் உள்ள பழைய டைல்ஸ் கற்கள் அகற்றப்பட்டு, தளங்களாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் அசோகன், உதவி ஆணையாளர் சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளர்கள் முத்து, செல்வராஜ், உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story