ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு


ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Nov 2019 4:52 AM IST (Updated: 22 Nov 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்க 40-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர். இப்படி சேகரிக்கப்படும் குப்பைகளை தாலுகா அலுவலகத்தின் பின்புறத்தில் கொட்டப்படுகிறது.

இந்த பகுதி குடியிருப்பு பகுதியாகும். இங்கு குப்பைகளை கொட்ட அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோரிக்கை மனு

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் வாசுதேவன், வக்கீல்கள் தில்லைகுமார், நரசிம்மன், சாம்சித்தார்தன், கோல்ட்மணி தலைமையில் பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசந்திரபாபுவை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, இறைச்சி மற்றும் மருத்துவ கழிவு பொருட்களை அரசு அலுவலகம் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அவற்றை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் சுத்திகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story